Sunday, 5 January 2020

7.மயில் வாகனம்


ரமேஷும், ஜான்சியும் தங்களது பிள்ளைகளுக்கு கிறிஸ்துமசுக்கு துணி எடுக்க scooty ல் மார்த்தாண்டம் செல்ல முடிவு எடுத்தார்கள். நம்ம 
ரமேஷுக்கு வயசு 40 இருக்கும், அனா இதுவரை சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லை. இந்த scooty கூட ஜான்சியின் தம்பியின் scooty தான்.
 
நம்ம ஆளு இருக்குதது தான் துபாய்ல ஆனா ஊருல இதுவரை சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லை. ஊருக்கு எப்போ வந்தாலும் இந்த Scooty தான் ரமேஷ் குடும்பத்துக்கு மயில் வாகனம்.
 
இரு பிள்ளைகளையும் ரமேஷின் அம்மா வீட்டில் விட்டுவிட்டு 11:30 மணிக்கு அவர்களது மயில் வாகனம் மார்த்தாண்டத்தை நோக்கி புறப்பட தயாரானது. வீட்டின் உள்ளிருந்து "அண்ணா,அண்ணா நில்லுங்க!! இப்போ நம்ம ஏரியால பயங்கர செக்கப்பு, இந்த ஹெல்மட்டை தலைல வையுங்க" என ரமேஷின் பாசமலர் தங்கை நீட்டினாள்.
 
"வே ஏறுனயா" என பின்னாடி நின்ற மனைவி ஜான்சியிடம் scooty கண்ணாடியை பார்த்து கொண்டே கேட்டான் ரமேஷ்.
 
"நில்லுங்க! ஏய் ஏறுதேன்" என ஜான்சி சொல்லி கொண்டே ஏறி அமர்ந்தாள்.
 
ஜான்சி மக்களை பார்த்து, "மக்களே! பாட்டி, தாத்தாவை தொந்தரவு செய்யாதேங்க. அத்தை சாப்பாடு தரும் ஒழுங்கா சாப்பிடணும். நாங்க ஒடனே வருவோம் என்ன" என கூறி புறப்பட தயாரானார்கள்.
 
"லேய் மோனே! எனக்க மோள, பாத்து கொண்டு போப்பா" என ரமேஷின் அம்மா மதில் கதவை பூட்டியவாறே சொன்னது.
 
"பாரடா!, பெத்து வளத்தின மோன விட இடைல வந்தவளுக்க மேல உள்ள பாசத்த" என ரமேஷ் தனது தங்கச்சியை பாத்து சொன்னான்.  
 
"கல்யாணம் தீந்து வருசம் 10 ஆச்சு, இப்பளும் புது ஜோடிய போல மக்கள இட்டுண்டு கறக்கம்" என ரமேஷின் தம்பி மனைவி அவளுக்க பங்குக்கும் போட்டு வைத்தாள்.
 
வண்டி காஞ்சம்புறம் தாண்டி சென்றதும் "ஏய், கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க, நான் ஷால எடுத்து மோகத்த மூடுதேன், பயங்கர தூசு" என ஜான்சி சொல்லி கொண்டே முகத்தை மூடினாள்.
 
அரை மணி நேர பயணதிற்கு பின் வெட்டுமணியை அடைந்தார்கள்.
 
"ஏய், இங்கு பாருங்க இப்போ பொடி ஒன்னும் இல்லை, பால வேலை முடிஞ்சனு தோணுது" என ஜான்சி கூறினாள்.
 
"ஆ!!! பால வேல முடிஞ்ச போட்டோ எல்லாம் facebook-ல ரண்டு மூணு மாசத்துக்கு முன்னே நான் பாத்தேன். இந்த ரூட்ல வந்ததால பாலத்தில எற முடியாதனு நெனைக்குதேன். திரும்பி போகும் போது பாலத்தில கூடி போகலாம்" என ரமேஷ் கூறினான்.
 
பாலத்தின் அடியில் மயில் வாகனத்தை நிறுத்து விட்டு நல்லா சில்க்ஸ்-ல் சென்றார்கள். தரைத்தளதில் நின்ற மேற்பார்வையாளர், இருவரையும் வரவேற்று
 
"மேடத்துக்கா துணி சார்"
 
"இல்ல குழந்தைகளுக்கு"
 
சார இரண்டாவது தளத்திற்கு கூட்டிட்டு போமா என கடையில் நின்ற சக பணியாளாரிடம் மேற்பார்வையாளர் கூறினார்.
 
இருவரும் லிப்ட்டில் ஏறி மேல்தளத்திற்கு சென்றார்கள். சிறிது நேர தேடலுக்கு பிறகு ஒன்றும் பிடிக்காமல் நாகர்கோயில் செல்ல தீர்மானித்து கடையில் இருந்து இறங்கினார்கள்.
 
மயில் வாகனம் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட தயாரானது.
 
"ஏ, நாகர்கோயில் வர வண்டி ஓட்டுவீரா?" என ரமேஷ பார்த்து ஜான்சி கேட்டாள்.
 
"வேய், ஏறு. இல்லைனா நீ பஸ்ல வா" என ரமேஷ் கூறினான்.
 
"ஏ! இல்ல, இந்த 10 வருஷத்துல இதுவர பைக் ல நம்ம இத்துற தூரம் போனது இல்ல, அதுதான்" என இழுத்தாள் ஜான்சி.
 
"வேய், பேச்ச கோற.
ஏறு! ஏறு! ஏறு!.
மழை வறத போல இருக்கு"
 
"ஏ!அந்த ஹெல்மட்ட எடுத்து போடுங்க"
 
"ஓகே மா ஓகே!!!, மாமியாருக்க மருமோளே ஏறு"
 
ஜான்சி ஏறி அமர்ந்தாள் வண்டி சீறி பாய்ந்தது நாகர்கோவில் நோக்கி.

(சீறி பாய்ந்தது என சொன்னா நம்பவா போறீங்க. எதுக்கும் கெடக்கட்டு)
 
--தொடரும்

#poothurai

6.சைக்கிள்


சைக்கிள்
==============
8 ம் கிளாசு பள்ளி லீவுல 4 கும்பாரிமாரு காஞ்சாம்புறத்தில போய் வாடகை சைக்கிளு எடுத்து வந்தானுவ, ஓட்டி பளவ. ஆளுக்கு ஒரு றவுண்டு எடப்பாடு(பூத்துறை எடப்பாடு) றோட்டில இருந்து கடப்பறம் வர உள்ள தொளி ரோட்டில. அப்ப எங்க வீடு எடப்பாடுல உள்ள காலனி வீடு. இந்த காலனிதான் பூத்துறைல அரசாங்கம் கெட்டி குடுத்த மொத டெறஸ் போட்ட காலனி. எனக்கு அதுவர சைக்கிளில பெறக்க ஏறயே பேடி. அண்ணுதான் முதல் முதலாட்டு சைக்கிளில ஏத்தி இருத்தி ரெண்டு சைடுல ரெண்டு ஆளு, பெறக்க ஒரு ஆளு புடிச்சு சைக்கிள ஒரு ஆட்டோ போல மாத்தினானுவ. 

எனக்க மனசு புள்ளா, ரெண்டு காலையும் தறைல இருந்து பெடல்ல வச்சா கண்டிப்பா தரைல விளுந்து எடுக்கும் பாரம் கிட்டும். இவனுவ 3 பேரும் கண்டிப்பா பாதில வுடுவானுவ ணு பேடிச்சே ஓட்ட தொடங்கினேன். 

பெறக்கேணு "லே மகேசு இடுப்ப வளச்சாத, இனியும் வளஞ்சது குறுக்குல ஒண்ணு கிட்டும் பாரு" என பேடி காட்டுனான்.

முன்ன புடிச்சிட்டு வந்தவனுவ "லே நேரே பாத்து ஓட்டு" னு சவுண்டு குடுத்தானுவ. நான் நேரே தலைய எளுப்பி பாத்த எங்க அப்பா மடிவளச்சிண்டு குளிச்ச போவ அந்த ரோட்டுல வாறு. 

சைக்கிளுக்க கிட்ட வந்த உடன,"ஓட்டுனது போதும் வீட்டில போ" என விரட்டி விட்டது. அதுக்க பிறவு வீட்டில ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்தது. பஞ்சாயத்து தீர்ப்பு "இனி சைக்கிள் பளவ கூடாது".
அதுக்க பலன் இன்னு வர ஒளுங்கா சைக்கிள் ஓட்ட தெரியாது. இப்ப வர ஊருல சொந்தமா சைக்கிளோ, பைக்கோ வாங்கினதும் இல்ல, சின்ன வயசில யாரும் வாங்கி தந்ததும் இல்ல.

ஆனா எனக்க மக 4 வயசில சைக்கிள் வேங்கி கேட்டு வேங்கி குடுத்தேன். கடைசியா ஊருக்கு போனப்ப அப்பாட்ட சைக்கிள் கதைய கேட்டதுக்கு சிரிச்சிட்டே "அப்படி வளத்துனதனால தானே இப்போ நீ இப்படி இருக்குத"

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு போல 🤩🤩🤩"

5.பாரன் சம்பாத்தியம்

பாரன் சம்பாத்தியம்
=======//================//
 
"லே புள்ள சந்தோசு, எண்ணப்பா வந்த? நல்லா இருக்குதயாப்பா?" என கனத்த குரலில் அந்தோணி கேட்டது. 
 
நல்லா இருக்குதேன் ஏய். நீங்க நல்ல இருக்குதீரா?
 
"நல்லா இருக்குதேன். என்னப்பா இந்த சின்ன வயசுல முடி எல்லாம் நரைச்சு போச்சு. உங்க அப்பன் இப்பவும் எளந்தாரிய போல நடக்குதான்." அந்தோணி நக்கலா ஒரு கேள்வி கேட்டது சந்தோச பார்த்து. எல்லாரும் மனசுல நினைக்குதத, அந்தோணி சந்தோசுக்க முகத்துக்கு நேரே கேட்டது.    

"ஏ அந்தோணி ஆளே, பாரன்ல போனா அரபிமாரு கை நெறய சம்பளம் தருவாங்க. மேலும் அந்த நாடு நம்ம கேக்காமலே இன்னொன்னும் தரும். அது ஒவ்வொரு ஆளையும் பொறுத்தது, சில பேருக்கு தொப்பை, சில பேருக்கு கசண்டி, என்ன போல சிலருக்கு வெள்ள முடி. என்ன பண்ண ஏய், அடுத்த தடவ வரும்போது நல்ல கருப்பு டை அடிச்சிட்டு வாரேன்." என சொல்லி சந்தோசு சிரித்தான்
 
"வேற என்னப்பா விசேஷம், மக்க எப்படி! நல்லா இருக்குதாப்பா"
 
"நல்லா இருக்குதாரு"
 
புள்ள, அரபிமாரு படிக்குத ஸ்கூல்லயா உனக்க மக்க படிக்குது. மடிவளச்ச எடத்துல உங்க அப்பன், மிக்கேலுட்ட சொல்லுண்டு இருந்தான். "அடுத்த மாசம் மக்களுக்கு ஸ்கூல் லீவு, அப்ப மோனும் மக்களும் வருவான்ங்கனு" அதுதான் கேட்டேன்.
 
இல்ல ஏ. நம்ம இங்க உள்ள ஸ்கூல்ல போலத்தான் அங்கயும். இங்க உள்ள புக்கு எல்லாம் தான் அங்கும் வரும். பின்ன எஸ்ட்ராவா அரபி, ஹிந்தி எல்லாம் படிச்சுகுடுப்பாங்க.
 
அந்தோணி மிகவும் ஆச்சரியத்தோடு,
 
"புள்ள தமிழா!!!"
தமிழ்நாட்டுல நிறைய பள்ளிக்கூடத்துல தமிழ் சொல்லி குடுக்கலயாம். அங்கு தமிழ் சொல்லி குடுக்குதாராக்கும்? சும்மா இல்ல பண்டு உள்ளவன் சொன்னான் "முற்றத்து முல்லைக்கு மணம் இல்லைனு".
 
"ரெண்டு மக்களும் பள்ளிக்கூடத்துல போகேது புள்ள" என அந்தோணி அடுத்து கேட்டார். 
  
"ஆ. ஏ போகுது."
 
"எதாவது சொத்து சேக்க வேண்டிய காலத்தில, கிட்டுத பைசாய அங்கே செலுவு செஞ்சு தீத்தா எப்படியப்பா?" என சந்தோசின் பேரில் உள்ள அக்கரையில் அந்தோணி எதேச்சையா கேட்டது.
 
கடந்த ஒரு மாதத்தில் பலமுறை பலரால் சந்தோசின் முன் எழுப்பப்பட்ட கேள்வி. சந்தோசும் ஒரு நமட்டு சிரி சிரித்து விட்டு எல்லாருட்டையும் சொல்லுதத போல "வாறத போல பாக்கணும் வேற என்னேயே...ஏ" எனகடந்து செல்ல முயன்றான்.
 
ஆனால் அந்தோணி உடுத பாடு இல்ல "புள்ள இப்படி சொன்னா எப்படி நீங்க கொஞ்சம் படிச்சவங்க, உங்க அப்பன் நீங்க கடலுல போய் கஸ்ட பட கூடாதனு உங்கள படிச்ச வச்சான். நீங்க நாலு காசு சேத்து வைக்குதத விட்டுட்டு, பெறவு எங்கள போல வயசு ஆனாலா சேக்குவி?"
 
"ஏ, சொத்து சேர்ப்பதும், பணம் சேர்ப்பதும் தேவைதான். ஆனால் அதை விட ரொம்ப ரொம்ப முக்கியமான தேவை நம் மக்க. பணமும் சொத்தும் சேர்க்க ஓடும் ஓடத்தில் மக்கள வளக்க தவறினால்? நம் தலைமுறையே ஆட்டம் கண்டு விடும். உங்களுக்கே தெரியும், சின்ன வயசுல நான் ஒரு தப்பு செஞ்சா எங்க அப்பா ஓட ஓட விட்டு அடிக்கும். ஆனா இப்போ எனக்க மோன கோவத்துல திட்டுனாலே என்னைய போட்டு பறையுது, எங்க அம்ம ஒரு மூலைல போய் "அங்கும் இவன் மக்களை இப்படியான் போட்டு அடிச்சுவான் போலைனு" கெடந்து ஒப்பாரிவச்சுது. மக்க ஊருல இருந்தா இவுங்க செல்லம் குடுத்தே பளாக்குவாங்க" 
 
அந்தோணி ஆளே! வாழ்க்கைல ஒரு சின்னஆசைதான் எனக்கு, "என்னய எங்க அப்பா வளத்தினது போல, எனக்க மக்கள நான் வளத்தணும் அத்திறையும்தான். வேறே சொத்து, பணமனு ஒரு எண்ணமே இல்ல"
 
"ஏ, நம்ம ஊருலேணு பரான்ல இருந்து உள்ள இடத்தை எல்லாம் வாங்கி போட்ட பாரான் ஜான்சனுக்க நிலைமைய பாத்தீரே, சொந்த மக்களே சொத்துக்கு வேண்டி அந்த ஆள பாக்காத இட்டு கடைசில இந்த சின்ன வயசிலேயே அந்த ஆளு செத்தது. செத்தனு சொல்லுதத விட கொன்னானுவ. இப்போ அந்த புள்ளவ நடக்குத நடைய பக்குதீரே நீங்க?" என சந்தோசு நிறுத்தாமல் அடுக்கி கொண்டே போனான்.  
 
அந்தோணி குறுக்கிட்டு, "புள்ள நீ சொல்லுதது எல்லாம் சரிதான். திடீர்னு பரான்ல இருந்து ஊருக்கு திரும்பி வந்தா என்னப்பா பண்ணுவீ? நாலு காசுஇருந்தாதானே ஊருல எதாவது தொழிலு செஞ்சு பிளைச்ச முடியும்".
 
இப்பளே மக்க ஊருல ஸ்கூல்ல போறம்னு சொல்ல தொடங்கிச்சு. மக்க கொஞ்சம் கூட வளந்து நாங்க ஊருல நிக்குதோமனு சொன்ன, நமக்கு என்னசொல்ல முடியும் ஏ? அது வர இப்படியே போட்டு.   
 
"ஏ வேற ஒண்ணும் இல்லைனா, ஊருல ஒரு பெட்டி கடைய போட்டு உள்ளத வச்சு பொழைச்ச வேண்டியதுதான்." சொல்லி சந்தோசு சிரித்தான்.
 
"அடுத்து எப்போம் உங்க அப்பன அங்கு கொண்டு போறீ?" என அந்தோணி கேட்டது.
          
அந்தோணி ஆளே, அவுங்க லாஸ்டா அங்கு வந்தப்ப அவுங்கள பாக்க சங்கடமாட்டு இருந்தது. ஊருல பறவைய போல பறக்குதவங்கள சும்மா வீட்டுல அடைஞ்சு போட்டத போல இருக்கும்.
 
வந்து ஒரு வரம் கழிஞ்சு காலைல மக்கள ஸ்கூல் வண்டில ஏத்தி விட்டிட்டு வாக்கிங் போவாங்க. பிறவு ஒரு 10 மணி போல அப்பா பக்கத்துல உள்ள முடிவெட்டுத கடைல போய் தமிழ் பேப்பர் படிக்கும்.  
 
ஒரு நாளு வேல தீந்து வந்தப்ப சின்ன கார மீனு பொரிச்சு வச்சு இருந்தது.
 
நான் கேட்டேன், "இந்த மீனு எங்கைனு கெடச்சது?"     
 
எனக்க பொண்டாட்டி சொன்னா "அப்பா மடிவளச்ச போய் கொண்டு வந்தது" என சொல்லி சிரிச்சா.
 
அப்பாட்ட கேட்டப்ப,"மோனே, நேத்து நடக்க போறே எடத்துல தும்பு எறிஞ்சாங்க. அதுல ஒரு தமிழ் ஆளு நான் வேஷ்டி உடுத்துண்டு போறத பாத்து, அண்ணா நீங்க தமிழ்நாடா?" என கேட்டது
 
நான் ஆமா என சொன்னேன், உடனே "நல்ல மீனு இருக்கு கொண்டு போறீரா?"    
 
"தம்பி பைசா கொண்டு வரல நாள வாங்குதேன்"
 
அதுக்கு அவரு, "இத கொண்டு போங்க, பைசா நாள தந்தா மதினு சொல்லி கைல தந்தது." நாள பைசா கொண்டு குடுக்கணும்.
 
நான் சொன்னேன், "அந்த அளுக்க கூட அப்படியே தொழிலுக்கு போவாட்டி?"  
 
அம்மா சிரிச்சிட்டே, "மோன அது எல்லாம் விசாரிச்சாச்சு அய்யாளு, செல்லப்ப நாள போனாலும் போகும்"
   
அந்தோணி உடனே "அவன் அங்கு வந்தும் கடப்புறத்தில போறத நிறுத்தல அப்போ?"
 
அந்தோணி ஆளே "கடலும் கடப்புறமும் அய்யாளுக்க உசிரு. இப்பழும் நெறய பெரு,
 
"லே சந்தோசு , உங்க அப்பன வீட்டுல இருத்தி சாப்பாடு போட வேண்டியது தானே? இப்பழும் அவன என்னத்துக்கு கடலுல உடுதி" என கேக்குவாரு.
 
ஐயாளு இப்பளும் கடலுல போறதினாலதான் ஆசுவுத்திரி பக்கம் போகல. இல்லைனா உங்கள போல ஐயாளும் பிரசுரும், சுகரும் மாட்டு  இப்போ மாத்திரயும் அசுவுத்திரியுமா அலைய பாத்தது.             
 
ஓகே "லீவு நெறய நாளு உண்டாப்பா?" 
 
"ஒரு மாசம் உண்டு ஏ"  
 
"அப்ப பாக்கலாம் புள்ள" என கூறி இரண்டு பெரும்விடை பெற்றார்கள்.

4..கடலும் நானும்

எனக்கும் கடலுக்கும் உள்ள உறவை கூறும் முன், எங்க அப்பாவுக்கும் கடலுக்கும் உள்ள உறவைகூறி எனக்குள் கடக்கலாம்.

எனது அப்பா திருமணத்திற்கு முன்பே இரண்டு boat  சொந்தமாக  வைத்து தொழில் செய்ததாக எங்க ஆத்தா எப்போதும் கூறும். ஆனால் boat எடுத்த சில மாதங்களில் இரண்டு boat ம் ஒன்றன் பின்ஒன்றாக கடலிலிலேயே தாந்ததாம். எனக்கு ஜபாகம் வந்த பின்பு கூட அப்பா, எங்க ஆத்தாவிடம், ஒரு boat கூட எடுக்கலாம்னு பேச்சு எடுத்தா போதும், ஆத்தா பேய் ஆட்டம் போடும். இருக்குத வலைய 
வச்சு தொழில் செஞ்சா போதும் வேற ஒண்ணும் போடண்டா.

ஆனால் எனக்கு ஜாபகம் வந்தது முதல் எங்க அப்பா ஒரு பெரிய மரம்புடியாளி. ஊருல ஆனி ஆடி மாதங்களில் ஒரு மரம் புறப்ட்டாலும் அது எங்க அப்பா உட்ட மரமாட்டுத்தான் இருக்கும். காலைல 4 மணிக்கு வீட்டில் இருந்து கடலுக்கு சென்றால், சில நாள்கள் வீட்டுக்கு வர இரவு 8 மணி வரை ஆகும். காலைல மரம் புடித்துவிட்டு அப்படியே டிஸ்கோ வலை தள்ளும். அப்போது எங்களது வீட்டில் டிஸ்கோ வலை மற்றும் நோத்தோலி வலை மட்டும் தான் உண்டு.(அப்பாவீட்டில் இல்லாத சில நாள்களில் சித்தப்பாவுக்கு டிஸ்கோ வலை கட்ட உதவியதும் உண்டு) ஊரில் தொழில் இல்லாத காலங்களில் மட்டும் கேரளாவில் வள்ளத்தில் தொழிலுக்கு போகும். நான் எட்டாம் கிளாசில் படிக்கும் போது எங்கஅப்பா சொந்தமாக ஒரு வள்ளமும் மெஷினும் வாங்கியது. மூணு நாலு வருசம் அதை வைத்து தொழில் செய்ததாக எனக்கு ஜாபாகம். அதன் பின்பு அதை விற்று விட்டு எங்களது ஒரு போத்தியின்(அப்பாவின் தாய் மாமன்) கரமடியை எடுத்து தொழில் செய்ய தொடங்கிச்சு. அந்த போத்தி இறந்த பிறகு அது எங்க அப்பாவிடம் வந்தது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை அது தான் எங்க அப்பாவுக்கு பிடித்தமானதொழில்.

சில வருடங்களுக்கு முன்பு வரை எனது நண்பர்களும் உறவினர்களும் நான் ஊரில் செல்லும் போது 

"மக்களே உங்க அப்பா நல்ல கடலு அடிச்சித சமயத்திலயும் பண்டப் போல மரம்புடிச்ச போறு, கரமடில வல சுத்த போறு. ரெண்டு மூணு தடவ நல்ல அடி பட்டு தப்பி பிழைச்சது. நீங்க கொஞ்சம் சொல்லி வெலக்குங்க மக்களே".

நான் அவர்களுக்கு "ஆ சொல்லுதேன் ஏ" என கூறிவருவேன். 
ஆனால் இந்நாள் வரை அப்பாவிடம் எதுவும் சொன்னது கிடையாது.

கடந்த ஞாயிறு போன் செய்த போது 

"மோனே நான் boat ல தொழிலுக்கு வந்தேன். ஊருல ஒரு தொழிலும்  இல்லை. வீட்டில சும்மா இருந்து நேரம் போவுல. பத்து பதினஞ்சு நாளில அணையுவோம் மோனே".

நானும் பதிலுக்கு "ஓகே அப்பா உடம்ப பாருங்க" என கூறி முடித்து 
கொண்டேன்.

30 வயசிலேயே சுகரும், பிரசரும் வந்துஅவதிப்படும் இந்த காலத்தில், கடல் தொழில்தான் அப்பாவை இந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இப்படி கடலே கதியனு கிடந்த அப்பா, நாங்க கடலில் காலு நனச்சிட்டு வந்தாலே ஓட ஓட அடிச்சு விரட்டும்.

கரமடி

6,7,8 வகுப்புகளில் படிக்கும் நாள்களில்சனிக்கிழமை மற்றும் விடுமுறை வந்தாலேநண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அந்த நாள்களில் நண்பர்கள்கரமடி,நண்டுபந்தம்,தும்பு எறிய என மிகவும்மும்முரமாக இருப்பார்கள். இவர்கள் பேசுவதைகேட்க்கும் போது மிகவும் த்ரில்லலாக இருக்கும்.

ஒருமுறை அப்பா கேரளத்தில் தொழிலுக்குபோனபோது நண்பர்கள் உடன் சேர்ந்து கரமடிவளைக்க சென்றேன். அதுவும் எங்கதாத்தாக்க(அப்பாவின் தாய் மாமன்) கரமடி. வளச்சிட்டு இருக்கும் போதே அப்பாவின்நண்பர்கள் சில பேர் "நாவியன் இல்லாத குறையஅவனுக்க மொவன் தீக்குத்தான்".

நானும் அவர்களை பார்த்து சிரித்துகொண்டேன்.ஆனால் உள்ளுக்குள் மிகவும்பயத்துடன் "இந்த அளுவ அப்பாட்ட சொன்னாநான் சத்தேன்".

மடி கிறிஸ்துராஜா குருசடி பக்கத்தில ஏறிச்சு. மடில நெறய மீனும் பட்டது. சின்ன பசங்க நாங்கஎல்லாரும் வீட்டுல சென்று தண்ணி குடிச்சிட்டுவந்து பங்கு பைக்குத எடத்துல காத்து இருந்தோம். நண்பன் ஒருவன் சொன்னான்,"இந்த மடிலபொதுவா பங்கு பைக்குதது உங்க அப்பா தான். உங்க அப்பா இல்லைனா உங்க ஆண்ட்றோஸ்மாமன்".

அனைத்து ஆட்களும் வந்து வட்டமாகஅமர்ந்தார்கள். சில ஆட்கள் ரூபாய் நோட்டுகளை5,10,20,50,100 என தனி தனியாக பிரித்துஇரண்டாக மடித்து வைத்தார்கள்.

மாமா நடுவில் சென்று அமர்ந்தது. அனைத்துஆட்களையும் கறக்கி ஒரு பார்வை பார்த்து விட்டுஆட்களை நோக்கி "எல்லாரும் வந்தாச்சாமொத்தம் ஆளு ஏத்துற"

உடனே பிலிப்போஸ் எங்க கூட்டத்தை பார்த்து
"புள்ள நீங்க  எத்துற ஆளு?".

"ஏய், நாங்க ஏழு பேரு" என ஆவேல் சொன்னான்.

பிலிப்போஸ் மாமாவை பார்த்து "ஆண்ட்றோஸ் சின்ன பசங்க ஏழு, கெளவமாரு 22, மும்பமாரு 12, வலுவகாறமாரு 15, நொளயமாரு 6 பின்ன நம்மபொட்டன்"

மாமா மீண்டும் "வேற வெல்ல ஆளும் மிஸ் ஆச்சாக்கும்".

"இல்ல மொத்தம் இத்துற அளும்தான்" என ராஜுசொன்னது.

மாமா, அடுக்கி வைத்து இருந்த பைசாவின் மேல்ஒரு டவலை விரிச்சு போட்டது. அதன் பின்புஎங்களை பார்த்து "சின்ன பசங்க ஒவ்வொருத்தராவாங்க"

உடனே ஆவேல் முதல் ஆளா போய் நின்றான். அவன்பின் நாங்கள் ஒவ்வொருவராக சென்றோம்.

நான் போய் நின்றதும் "ஏய், உங்க அளியனுக்கமோவன் நெறய குடுங்க" என மளுக்குசொன்னதும் அனைவரும் சிரித்தார்கள்.

"புள்ள மகேசு நீ மடிவளச்ச வந்தது உங்கஅப்பனுக்கு தெரியுமா?" என ராஜு கேட்டது.

உடனே மாமா, "கும்பாரிமாரு விளிச்சிட்டு வந்து காணும், இல்லைனா அவன் எங்கு வருவான். ஒருத்தரும் நாவியனுட்ட சொல்லாதைங்கப்பா." என எனக்கு சப்போட்டா பேசிட்டு. டவல் அடிலஇருந்து பைசாவை எடுத்து ஒரு முறுக்கு முறுக்கி "கையை நீட்டு" என் சொன்னது நானும் நீட்டினேன். 
எனது உள்ளங்கைல வைத்து கைய முறுக்கி பிடி யாரிட்டையும் காட்டா தைனு சொல்லி தந்தது.

"அம்மா நான் கடப்புறத்துல வெளிக்கு இருக்க போனப்ப கும்பாரிமாரு மடி வளைச்ச கூட்டிட்டுபோனாங்க" என சொல்லி பங்கு பைசாவை நீட்டினேன்.

"லே மோனே உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்னைய கொல்லும்." அம்மா ஒருவித பயத்துடன்சொன்னது.

இரண்டு வாரம் கழிச்சு அப்பா கேரளத்துல தொழில் இல்லைனு ஊரில் வந்தது. நானும்அம்மாவும் பயந்து பயந்தே இருந்தோம். எப்போவெடி வெடிக்க போகுதோ என.

குடிச்ச போன எடத்துல யாரோ புண்ணியவான் உனக்க மொவன் மடிவளச்ச வந்தான் என போட்டுவிட்டு இருக்கான். ஆன்னு ராத்திரி வீட்டில் வந்து எனக்கும் அம்மாவும் நல்ல கவனிப்பு கிட்டிச்சு.

நண்டு பந்தம்
நண்பர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுமுறை என தெரிந்தால் வெள்ளி சாயங்காலமே மிகவும் பரபரப்பாக காணப்படுவார்கள். தங்கள் நண்பர்களோடு கடலில் நாளை என்ன பண்ணலாம் என கூடி பேசி கொள்வார்கள். என்னை போன்ற முக்கால்வாசி சிறுவர்களும் மடிவளைப்பது, தும்பு எறிவது, நண்டு பந்தம், தூண்ட மரம் தள்ளுவது என ரொம்ப பிஸி ஆக இருப்பார்கள். ஆனால் என்னை போன்ற சிலர் மட்டும் தான் கடலில் நனைந்தாலே வீட்டில் பின்னி பெடல் எடுப்பாங்க.  

அப்பா ஊரில் இல்லாத ஒரு ஒரு நாளில், பள்ளிமுடித்து வரும்போது நான் நண்பன் ஆபேலிடம்
"நானும் நண்டு பந்தம் பாச்ச வரட்டா" எனகேட்டேன்.

"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்னைய அடிச்சுவெளுக்கும் நீ வேற யாருக்க கூடையாவதுபோப்பா" என சொன்னான்.

"அப்பா 2 நாளுக்கு முன்ன தான் கேரளத்துல போச்சு, வர எப்படியும் ஒரு மாசம் ஆகும். நம்ம தூத்தூர் ஒய்த்துக்கு போய் நண்டு பந்தம் பாச்சலாம் யாருக்கும் தெரியாது" என கூறி ஒருவழியா சம்மதிக்க வச்சேன் ஆபேலை.

"அப்போ ராத்திரி 7 மணிக்கு இர தோண்ட போணும்" என ஆபேல் சொன்னான்.

"ஓகே" என கூறி பிரிந்து சென்றோம்.

அப்போது ராத்திரி வேளைகளில் குடும்ப செபமாலை படிக்கும் வழக்கம் உண்டு. இரவு செபமாலை முடித்து வெளியில் வந்தபோது ஆபேல் இர தோண்ட போக எனது வீட்டின் முன் என்னை காத்து நின்றான்.

"அம்மா கடப்புறத்துல வெளிக்கு போவுண்டு வாறேன்" என அடுக்களையில் நின்ற அம்மாவிடம்சொன்னேன்.

"மோனே ராத்திரி நல்ல கடலடி சத்தம் கேக்குது குப்பைல போ" என அடுக்களையில் இருந்து பதில் வந்தது. அம்மா குப்பை னு சொன்னது எங்க கார்லோஸ் போதிக்க இடத்தை. கார்லோசும் எங்கபோத்தி சிலுவைபிச்சையும் அண்ணன் தம்பிங்க. 

"நான் பாத்து இருக்குவேன், ஆபேல் கூட வாறான் அம்மா" என சொல்லி சென்றேன்.

ராத்திரி நிலா வெளிச்சத்தில் ஆபேல் நண்டுகுழிய தேடி நடந்தான். ஒரு குழியை பார்த்தவுடன்,குழியின் மேல் காதை வைத்து மணலில்படுத்தான்.

"என்னத்த கேக்குத கெடந்து ஆபேலு" நான்கேட்டேன்.

"நண்டு உள்ள இருந்தா சவுண்ட் கேக்கும், சும்மா தோண்டி டைம்மை களயாண்டமில, அதுதான்" எனஆபேல் பதில் சொன்னான்.

"இதுல நண்டு உண்டு நீ தோண்டு, நான் வேறகுழிய பாக்கட்டு" என என்னிடம் சொல்லி சென்றான் ஆபேல்.

நானும் குழிய தோண்ட ஆரம்பிச்சேன், சிறிதுநேரத்தில் கைல நண்டு கடித்து விட்டது
"ஆபேலு" என கத்தினேன்"

"என்ன?, மகேசுன்னு" ஓடி வந்தான்.

"கைல நண்டு கடிச்சது அளியா ".

ஆபேலு ரத்தத்தை பிதுக்கி களஞ்சிட்டு,"பாத்துதோண்ட வேண்டியது தானே" என சொல்லி குழிலகைய விட்டு லாவகமாக நண்டை வெளில எடுத்தான்.

ஒரு பெரிய நண்டு, "ஒரு பந்தத்துக்கு இது ஒண்ணும் போதும்" என ஆபேல் கூறினான்.

இர நண்டையெல்லாம் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு அதன் மேல் கொஞ்சம் சவறஎடுத்து அடையாளத்துக்கு போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றோம். 

சனிக்கிழமை காலை திருப்பலி முடிந்து வீட்டுக்குவந்து நொண்டிக்க கடையில் இருந்து வாங்கி வைத்து இருந்த புட்டும் களியும் அவசர அவசரமாக தின்னு முடித்து விட்டு. "அம்மா கடப்புறத்துல விளையாட போறேன், வர கொஞ்சம் பிந்தும் தேடாதீங்க அம்மா" என சொல்லி கிளம்பினேன்.

"லெய் மோனே மடிவளச்ச போவத அப்பாவுக்குதெரிஞ்சா என்னையும் சேத்து கொல்லும்" என அம்மா சொன்னது.

நான் செல்லும் முன்னே கடப்புறத்துல ஆபேல் வேலைகளை ஆரம்பித்து விட்டான்.

கரமடி மால 4 சின்ன துண்டாக கீறி ஒரு மரத்தின்மேல் விரித்தான். பின்பு எர நண்டை கொன்று ஒவ்வொரு மாலின் மேல் வைத்து சிறிய கல்லால் இரையை சதைத்தான். அதன்பின் மாலின்அனைத்து முலைகளையும் ஒன்றாக சேர்த்து ரோளில் கட்டி விட்டான். ரோளின் அடுத்தமூலையில் ஒரு மரத்துண்டு  கட்டப்பட்டு இருந்தது.
கட்டும்போதே "இப்போ இந்த இரயில நண்டு அந்த அளவு பிடிச்சுதில்லை. மாட்டு கோடலு இல்லைனா சிறாவு கோடலுல நல்லா நண்டு பிடிச்சுதாம், அடுத்த தடவ அந்த இரயான் பாக்கணும்" என ஆபேலு சொன்னான்.

துணிகளை கழற்றி ஒரு கரமடி வள்ளத்தின் உள்பத்திரமாக வைத்து    விட்டு. ஒரே ஒரு அடயில் இரண்டு பெரும் கடலுக்குள் சென்றோம். அலையடிக்கும் இடத்தை கடந்ததும்
"நீ இந்த அடயில் நீஞ்சு போ நான் கை பாரத்திலவறேன்" என கூறி ஆபேல் வேகமாக நீந்தினான். 

கரையில் இருந்து ஒரு 200 அல்லது 300 மீட்டர்தொலைவில், சிறு இடைவெளி விட்டு ஒவ்வொரு பந்தமாக ஆபேல் கடலில் இறக்கினான்.

அனைத்தையும் இறக்கி முடித்து என்னை நோக்கி, "மகேசு, நண்டு புடிச்சா இந்த மரத்துண்டுசின்னதா ஆடும் இல்லைனா நண்டு இத இழுத்துண்டு போகும்”  என கூறி முடிப்பதற்குள்

"அன்னா இழுக்குது பாரு", என பந்தத்தை பார்த்து திரும்பி கூறினான்.  

" மகேசு, மெதுவாக பந்தத்தை இழுக்கனும் சின்ன அனக்கம் தட்டினாலும், நண்டு விட்டுண்டு போகும்" என கூறியவாறே மெதுவாக இழுத்தான் ஆபேல்.

"இப்ப இத நீ பிடி என கூறி", கச்சாவை கொண்டுகடலுக்குள் மூழ்கி  
சென்றான். மேலே வரும்போது ஒரு பூவாலன் நண்டோடு வந்தான்.

"மேல வரும்வர இருந்தா சில சமயம் விட்டுண்டு போவான், அதுயான் குளிச்சு போய் எடுத்தேன்" என பெருமையோடு சொன்னான் ஆபேல்.  

இப்போ எனது முறை, நானும் சிறிது தூரம் மூழ்கிபோய் நண்டு எடுத்தேன். பின் நாள்களில் தரையில் போய் கூட நண்டு எடுத்து வந்தது உண்டு. சிறிது நேரத்தில் அனைத்து இரையும் தீர்ந்து வெறும் பந்தம் ஆனது. இருவரும் கரையில்செல்லலாம் என முடிவு எடுத்து கரைக்கு திரும்பிகொண்டு இருந்தோம்.

அந்த நேரம் பார்த்து மிக பெரிய அலைகள் அடிக்கஆரம்பித்தது. ஆபேலின் கையில் நண்டு கச்சாஇருந்தது. இரண்டு பெரும் அடைய பிடித்து நீந்தஆரம்பித்தோம்.

"மகேசு, வலிய மாட்ட எடுத்தா அப்படியே ரெண்டுபேரையும் கரைல கொண்டு விடும். நான்செல்லும்போ அடைய strong அ பிடிச்சிட்டு கிடந்தாமதி."

நானும் "ஓகே" சொன்னேன்.

ஒரு வலிய கடலு வந்தது"மகேசு மாட்டா எடு" எனஆபேல் சொல்லி முடிக்கும் முன் அவனை அதுதூக்கி கொண்டு கரையில் இட்டது. நான் பயந்துவிலங்க பாத்து நீந்தினேன். தொடர்ந்து மிகபெரிய அலைகளாக வந்து கொண்டு இருந்தது.
கரைல நிக்குது ஆபேல பாத்து "லே வா, காப்பாத்துகாப்பாத்து" என சத்தம் போட ஆரம்பித்தேன்.
அவன் கரைல நின்னு "வா வா" என கை காட்டிகொண்டே நின்றான்.

அடிக்குது கடல பாத்து நான் பயந்து போய் அழஆரம்பித்து விட்டேன். ஆபேல் போய் சீட்டுவிளயாடி கொண்டு இருந்த அவுங்க அண்ணன்அன்டனியிடம் நடந்ததை கூறினான். அவுங்கஅண்ணன் கடலில் பாஞ்சு வந்து என்ன கரையில்கொண்டு சேர்த்தது. இப்போ அதைநினைத்தாலும் ஒரு பயம் வரும்.

ஒவ்வொரு ஆனி அடி சீசனுக்கு அப்பா மரம்புடிக்குதத பாத்து பாத்து வளர்ந்தும் கடல உள்ளபயம் இன்னும் மாறவில்லை.


https://mariajohnpoothurai.blogspot.com/2018/11/blog-post.html?m=1