“தனி மனிதன் முன்னேற்றம் அடைந்தால், அவனது குடும்பம் முன்னேற்றம் அடையும். குடும்பம் முன்னேற்றம் அடைந்தால், அவனது கிராமம் முன்னேற்றம் அடையும். கிராமம் முன்னேற்றம் அடைந்தால், அவனது நாடு முன்னேற்றம் அடையும்.”
நாம் முன்னேறுகிறோம், நமது குடும்பம் முன்னேறுகிறது ஆனால் நமது கிராமம் முன்னேறியதா???
1990- ஐ கடந்த பின்பு நமது ஊர்களில் பெரிய பெரிய கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் பல கோடி ரூபாய் செலவழித்து ஊர் மக்களின் வரி பணத்தால் கட்டி முடிக்க பட்டு உள்ளன. இது ஊருக்கு ஊர் போட்டி மனப்பான்மை வளர்ந்ததால் ஏற்பட்ட மாற்றமே அல்லாமல் ஒருபோதும் மனிதர்களும், குடும்பங்களும் பெருகியதால் வந்த மாற்றம் கிடையாது.
கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களை கட்டி காக்க முனைப்பு காட்டிய நாம், இயற்கை நமக்கு கொடுத்த சுவையான குடிநீரையும், குளிப்பதற்கு இருந்த ஆறையும், பல வரி வீடுகளையும், நமது வாழ்வாதரமான பரந்து
விரிந்த கடற்கரையும் கட்டி காக்க தவறிவிட்டோம். குடிக்க குடிநீரும்,
கல்லூரிகளும், பொது கழிப்பிட வசதியும், கடற்கரையையும் அரசாங்கத்திடம் எதிர்
பார்க்கும் நாம்; கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும்போது மட்டும் ஊர் மக்களுக்கு வரி போட்டு, மக்களின் இரத்தத்தை உறிந்து பல கோடிகள் செலவு செய்வது ஏன்???
குடிநீர்
ஒரு சாதாரண குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 3 முதல் 5 குடிதண்ணீர் கேன் தேவைப்படுகிறது, மாதத்திற்கு 12 முதல் 20 தண்ணீர் கேன். ஒரு குடிதண்ணீர் கேனின் விலை 40 ரூபாய் ஆக மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 480 முதல் 800 ரூபாய். ஒரு கணக்கிற்காக ஒரு ஊரில் 300 குடும்பங்கள் கேன் தண்ணீர் உபயோக படுத்துகிறார்கள் எனில் மாதத்திற்கு 144000 ரூபாய் (300 x 480) முதல் 240000 ரூபாய் (300 x 800). இரயுமன்துறை முதல் இரவிபுத்தன்துறை வரை 5 கிராமங்கள், ஆக 7.2 முதல் 12 லெட்சம் வரை ஒரு மாதத்திற்கு நமது மீனவ குடும்பங்கள் செலவு செய்கின்றன.
பல கோடிகள் செலவு செய்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும் நமக்கு ஏன் நமது ஊர்கள் சார்பாக பல லெட்சம் ரூபாய் செலவு செய்து குடிநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் அமைத்து நல்ல குடிநீர் வழங்க முடியாது?
தொழில்நுட்ப கல்லூரி
நமது ஊர்களை சேர்ந்த பல மாணவர்கள் வெளிஊர்களில் தங்கி ITI, Diploma, Engineering மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கு
விடுதிக்கு மட்டும் வருடத்திற்கு 50,000 ரூபாய் முதல் 70,000 வரை செலவு
செய்கிறார்கள். பல குடும்பங்கள் இதன் காரணமாக நாகர்கோயில் மற்றும் சென்னை-
யில் வாடகைக்கு குடி பெயர்ந்து உள்ளனர்.
பல கோடிகள் செலவு செய்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும் நமக்கு ஏன் நமது ஊர்கள் சார்பாக ஒரு தொழில்நுட்ப கல்லூரி துவங்க முடியாது?
பொது கழிப்பிடம்
நமது ஊர்களில்
திருவிழா காலங்களில் 3 முதல் 4 மணி நேரம் வரை கோயிலில் ஆரதனை மற்றும்
திருப்பலிகள் நடை பெறும். இத்தருணங்களில் பெண்களுக்கு இயற்கை உபாதைகளுக்கு
செல்லவோ, கைகுழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டவோ போதிய வசதிகள் நாம் இதுவரை செய்து கொடுக்க வில்லை.
பல கோடிகள் செலவு செய்து கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டும் நாம் ஏன் சில லெட்சம் ரூபாய் செலவு செய்து நமது தாய், சகோதிரி, மனைவி மற்றும் மகள்களுக்கும் சில லெட்சம் ரூபாய் செலவு செய்து நல்ல கழிப்பிட வசதியும், தாய்ப்பால் கொடுக்கும் அறையோ கட்ட முடியவில்லை.
அடுத்ததை இழக்கும் முன் சிந்திப்போம் செயல்படுவோம் உடன்பிறப்புகளே...